தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
தேவா தன்னுடைய பாடல்களை சூப்பர் ஹிட்டாக கொடுத்தது போல தனது நேர்காணல்களிலும் அட்டகாசமாகப் பேசி ரசிகர்களைக் கவரும் திறன் கொண்டவர். அப்படி அவர் சமீபத்தில் டைட்டானிக் படத்தைத் தான் பார்த்த அனுபவத்தை சுவைபட பேசியுள்ளார்.
அதில் “அப்போது டைட்டானிக் படம் ரிலிஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது யாரைப் பார்த்தாலும் அந்த படத்தைப் பார்த்துவிட்டீர்களா எனக் கேட்பார்கள். நான் எனக்கு நேரமில்லை சீக்கிரம் பார்க்கிறேன் என சொல்லி வந்தேன். அப்போது ஒரு உதவி இயக்குனர் என்னிட, வந்து அந்த படம் சரியில்லை என்று சொன்னார்.
நான் அதிர்ச்சியாகி என்னப்பா சொல்ற எனக் கேட்க, “ஆமாண்ண, ஒரு கப்பல் போய் பனிப்பாறையில மோதி எல்லோரும் சாகிறார்கள். சரியான பில்டப்பே இல்லை. ரி ரெக்கார்டிங்கும் சரியில்ல என்றார். நான் போய் அந்த படத்தப் போய் பார்த்தேன். படம் அட்டகாசமாக இருந்தது. அருமையான பின்னணி இசை. இதைப் போய் அவர் பிடிக்கவில்லை என்று சொன்னாரே என ஷாக் ஆகிவிட்டேன். ” என ஜாலியாகப் பகிர்ந்துள்ளார்.