தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது, குழந்தைகளை வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுத்தத் தூண்டும் வகையில் விஜய் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எழுந்த புகார்களை ஆய்வு செய்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (TNSCPCR), இது தேர்தல் விதிமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானது எனக் கருதி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.
விஜய்யின் இந்தப் பேச்சு சிறுவர்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தேர்தல் ஆணையம் குழந்தைகளைத் தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தப் பரிந்துரை தவெக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு எதிராக எடுக்கப்படவுள்ள இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவரது அரசியல் பயணத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போதைய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
