“எல்லாம் ஏஐ சதி… கைது பீதியில் கதறும் முன்னாள் பாஜக புள்ளி”…. உயர்நீதிமன்ற கிளையில் திடீர் திருப்பம்….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, கட்சியின் மாநில ஓபிசி பிரிவு நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி அண்மையில் பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடமும் காவல் துறையிடமும் பரபரப்பான புகார் ஒன்ற அளித்திருந்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதில் தான் கர்ப்பமடைந்ததாகவும், அதனை வலுக்கட்டாயமாகக் கலைக்கச் செய்து, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்திச் சொத்துகளை அபகரிக்க முயன்றதாகவும் திவ்யா குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இருவரையும் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பாஜக தலைமை அதிரடியாக நீக்கியது.

திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கருப்பு முருகானந்தம், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

   

இந்நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பெண்ணிற்கு நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு, பாதுகாப்பிற்காகத் தான் பல்வேறு உதவிகளை மட்டுமே செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாறாக, ஏமாற்றியதாகக் கூறித் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

மேலும், தான் சமூகத்தில் மதிப்பிற்குரிய பொறுப்பில் இருப்பவர் என்பதால், காவல் துறையின் பொய் வழக்கில் இருந்து தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு கடுமையான நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் உறுதியளித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முன்ஜாமீன் மனு, விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.