தமிழக முதலமைச்சர் விஜய், உளவுத்துறை சேகரித்த தரவுகளின் அடிப்படையில் தனது அமைச்சரவையில் உள்ள 4 அமைச்சர்களை நீக்கவும், 3 பேரின் இலாகாக்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த பிறகு இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அமைச்சர்களில் சிலர் தொடர் சர்ச்சைகளில் சிக்குவதையும், அவர்களின் குறைந்த செயல்திறனையும் கருத்தில் கொண்டே நிர்வாக ரீதியாக இந்த முடிவை முதலமைச்சர் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய தவெகவைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேவேளையில் தவெகவின் கீர்த்தனா, கமலி மற்றும் காங்கிரஸின் ராஜேஸ்குமார் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், ராஜேஸ்குமாருக்குச் சுற்றுலாத் துறையை விட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதற்கட்ட அமைச்சரவை மாற்றம் முழுக்க முழுக்கச் செயல்திறன் அடிப்படையிலானது என்றாலும், இடைத்தேர்தலுக்குப் பிந்தைய இரண்டாவது மாற்றம் அரசியல் சார்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவால் தாமதமாகி வரும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்த பிறகு, தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
