சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம், பேப்பர் வீச்சு மோதலாக மாறி அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. குழு தலைவர் சதீஷ்குமார் தனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், “நாமெல்லாம் ஓட்டு திருடுகிறோம்” என்றும் பேசினார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தி.மு.க. தரப்பில் “உங்களுக்கு தலைவரே இல்லையே” என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி பாய்ந்த நிலையில், தி.மு.க. உறுப்பினர் சிவக்குமார் தன் கையில் இருந்த காகிதங்களை அவர் மீது வீசி எறிந்தார்; பின்னர் மூத்த உறுப்பினர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மண்டலக் குழு கூட்டங்களில் மண்டலத் தலைவருக்கு இணையாகச் சட்டமன்ற உறுப்பினர் எப்படி அமர முடியும் என்ற விவாதம் எழுந்தது. அதற்குப் பதிலளித்துப் பேசிய மேயர் பிரியா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில், மண்டல அலுவலகக் கூட்டங்களில் பங்கேற்கவும், மண்டலத் தலைவர் அமரும் மேடையில் அமரவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு என்று விளக்கமளித்தார். இந்தத் தள்ளுமுள்ளு மற்றும் சலசலப்புகளுக்கு இடையே, சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மொத்தம் 38 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
