தமிழக அரசியல் களம் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அரசின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து, விமர்சித்து வரும் வேளையில், முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்கு அதிரடியாகப் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பெரிய ‘செக்’ வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் கறாராக இருக்கும் அவர், மக்கள் மத்தியில் அரசுக்கு நற்பெயர் கிடைக்க அமைச்சர்களின் தூய்மையான செயல்பாடுகளே முக்கியம் என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
துறைகளில் முழு கவனம் செலுத்துவதுடன், மக்கள் நலத் திட்டங்களைத் தாமதமின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரக்கூடாது என்றும் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டதால், அமைச்சர்கள் பலரும் இப்போது ‘சைலண்ட் மோடுக்கு’ மாறியுள்ளனர். முதலமைச்சரின் இந்த கண்டிப்பு, தங்களின் செயல்பாடுகள் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது என்ற பயத்தையும் பொறுப்பையும் அமைச்சர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் யாரும் தினசரி செலவுகள் மற்றும் வழக்கமான கோப்புகளைத் தவிர, வேறு எந்தப் புதிய கோப்புகளிலும், குறிப்பாகப் புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போடக்கூடாது என்ற மிகத் தீவிரமான தடை உத்தரவை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் பலர், தற்போதைய தவெக அரசையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர்களை அணுகி வருவதாகத் தெரிகிறது. அமைச்சர்கள் அவசரப்பட்டு அவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களை வழங்கிவிட்டால், அது அரசுக்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கி, மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கெடுத்துவிடும் என்பதால் இந்த ஸ்டிரிக்ட் உத்தரவு போடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அரசியல் ஒருபுறம் அச்சுறுத்தினாலும், நிர்வாகத்தைத் தூய்மையாகவும் பவர்ஃபுல்லாகவும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் முதலமைச்சர் விஜய்க்கு உள்ளது. இதனால் மிகவும் யோசித்து, தீர்க்கமாக அவர் எடுத்துள்ள இந்த அதிரடி மூவ், ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் உற்று நோக்க வைத்துள்ளது. நிர்வாகத்தைச் சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடித் தடை உத்தரவு, வரும் நாள்களில் எத்தகைய அரசியல் மாற்றங்களையும், நிர்வாக ரீதியிலான முடிவுகளையும் தரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
