தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் களமிறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், தாராபுரம் பெரியார் சிலை அருகே திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பிரச்சார வாகனத்தில் சிறுவன் ஒருவனை ஏற்றிப் பேச வைத்துள்ளார். அந்தச் சிறுவன் முதல்வரை அவமதிக்கும் வகையிலும் விமர்சித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், குழந்தையை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி இந்த நிகழ்வு நடந்துள்ளது தேர்தல் களவில் கூடுதல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2026 சட்டசபை தேர்தலின் போது தவெக தலைவர் விஜய் குழந்தைகளிடம் வாக்கு சேகரிக்குமாறு கூறிய விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது நினைவுகூரத்தக்கது. பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துவது வெற்றியைச் செல்லாது எனக் அறிவிக்க போதுமான சட்டப்பூர்வ காரணமாகாது என்றும், அன்பின் வெளிப்பாடே தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்றும் தவெக தரப்பில் அப்போது வாதிடப்பட்டது. இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது பதிவாகியுள்ள வழக்கு தேர்தல் களத்தில் மீண்டும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
