உத்தரகாண்ட் மாநிலம் பவாலி-ஜியோலிகோட் சாலையில், கைஞ்சி தாம் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஹரியானாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஸ்கார்பியோ கார், பூமிதார் பகுதியில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்; ஒருவர் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறை மற்றும் எஸ்டிஆர்எஃப் மீட்புக் குழுவினர், அடர்ந்த இருளையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மக்களின் உதவியோடு பள்ளத்தாக்கில் இறங்கிப் நீண்ட போராட்டத்திற்குப் பின் காயமடைந்தவர்களையும் உடலையும் மீட்டனர்.
காயமடைந்தவர்கள் தற்போது பவாலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிவேகம், வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் ஆகியவற்றில் விபத்திற்கு எது காரணம் என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
