தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கவிதா, தாய் இல்லாத நிலையில் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவரது தந்தையுடன் தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டர்களான சஞ்சய் (19), உபேஷ் தர்மா (21), மற்றும் முத்தரசன் (18) ஆகிய மூவரும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில், மாணவிக்கும் சஞ்சய்க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சஞ்சய் ஆத்திக்காடு பகுதிக்கு வருமாறு மாணவியை அழைத்துள்ளார். அதன்பேரில் முத்தரசன் என்பவரது இருசக்கர வாகனத்தில் மாணவி அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய மூவரும் சேர்ந்து மாணவியை கருமேனி ஆற்றங்கரையோரம் உள்ள புதர்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியதை அடுத்து, சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் தப்பியோட முயன்ற மூவரையும் மடக்கிப் பிடித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை காதலிப்பதாகக் கூறி தனிமைக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால், போலீசார் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
