“எங்களைக் கேலி செஞ்சாங்க” ஒருவேளை சாப்பாட்டுக்கே எங்க வீட்ல கஷ்டம்… பார்வையற்ற கிரிக்கெட் அணியின் கேப்டன் தீபிகா டி.சி. கண்ணீர் பேட்டி..!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love
இந்தியப் பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தீபிகா டி.சி.யின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கடந்த காலப் போராட்டங்கள் மற்றும் தற்போதைய வெற்றி குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “நான் சிறிய வயதில் சாதாரண அணியினருடன்  விளையாடச் செல்லும்போது எல்லாம், ‘நீ பார்வையற்றவள், ஏன் எங்களுடன் விளையாட வருகிறாய்?’ என்று கூறி எங்களைக் கேலி செய்வார்கள். என் குடும்பம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுக்கே கூட மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் நானும் என் சகோதரர்களும் ஒரு பழத்தில் கிடைத்த பாதித் துண்டை மட்டுமே சாப்பிட்டிருக்கிறோம். அந்த நாட்கள் மிகவும் கடினமானவை.

இப்போது நாங்கள் போட்டிகளில் வெல்லும் பணத்தின் மூலம், என் பெற்றோர்களால் மாத ரேஷன் பொருட்களைக்கூட வாங்க முடிகிறது. இது என் குடும்பத்திற்குப் பெரிய உதவியாக இருக்கிறது. என் தந்தை ஒரு விவசாயி. எங்கள் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி. நான் தற்போது வருமான வரித் துறையில் வேலை செய்கிறேன். அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். என் கிராமத்திற்குச் சாலை வசதி வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணிடம் கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்தார். நாங்கள் எங்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்க முயற்சிப்போம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் தீபிகா. அவரது இந்த விடாமுயற்சி மற்றும் தேசப்பற்று பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது