“அருப்புகள்… பதிலோரை… “தளபதியார்… தளபவிதியார் ஆனாரா?”…. சட்டப்பேரவையில் தடுமாறிய தவெக அமைச்சர்… பாஜக வைத்த ஒற்றை ‘மீம்’ செக்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இதுவாகும். கடந்த 5-ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு, 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அவை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதன்பின், துறை சார்ந்த அமைச்சர்களின் பதிலுரைகளுடன் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்தன.

இந்தச் சூழலில், கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆற்றிய உரை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்று அறியப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, கையில் இருந்த அச்சிடப்பட்ட அறிக்கையை வாசிப்பதற்கே மிகவும் தட்டுத்தடுமாறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘பேரவைத் தலைவர்’ என்பதை ‘பேரவை தலைவர்’ என்றும், ‘அறிவிப்புகள்’ என்பதை ‘அருப்புகள்’ என்றும், ‘தளபதியார்’ என்பதை ‘தளபவிதியார்’ என்றும் தவறாகப் படித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

   

சாதாரண தமிழ் வார்த்தைகளான ‘இல்லங்கள்’ என்பதற்கு ‘இலக்கங்கள்’ என்றும், ‘உயரம் குறைந்த’ என்பதற்கு ‘உயரம் குறித்த’ என்றும் தவறாக உச்சரித்து அவர் வாசித்த பேச்சு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அச்சிடப்பட்ட தாளைக் கூடச் சரியாகப் படிக்க முடியாமல் தடுமாறும் ஒரு அமைச்சர், எவ்வாறு துறையின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவார் என்ற கேள்வியையும், விமர்சனங்களையும் இது எழுப்பியுள்ளது.

   

அமைச்சரின் இந்தப் பேச்சை எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் ரீதியாகவும் கையில் எடுத்துள்ளன. குறிப்பாகத் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியை விமர்சித்து மீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது” என்று பாஜக கடுமையாகச் சாடியுள்ள அந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கானோரின் கவனத்தைப் பெற்று வருகிறது.