இந்தியாவில் பான் கார்டு (PAN Card) விண்ணப்பிக்கும் முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, இனி பான் கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டை மட்டும் போதுமானதல்ல. விண்ணப்பதாரர்கள் தங்களின் அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் கூடுதலாகப் பிறப்புச் சான்றிதழை (Birth Certificate) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 1, 2023-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்குப் பான் கார்டு விண்ணப்பிக்கும்போது நகராட்சி அல்லது பிறப்பு-இறப்புப் பதிவாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அவசியமான ஆவணமாக மாற்றப்பட்டுள்ளது.
மற்ற விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை, ஆதார் அட்டையுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்தைப் பிறப்புத் தேதிக்கான ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பான் கார்டில் உள்ள பெயர் இனி ஆதார் அட்டையில் உள்ளவாறே துல்லியமாக இருக்க வேண்டும் என்பதும் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பான் கார்டு வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஆவணக் குளறுபடிகளைத் தவிர்க்கவும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல் புதிய விண்ணப்பப் படிவங்கள் (படிவம் 93, 94 போன்றவை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பழைய படிவங்கள் இனி செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
