பெங்களூரு நகரின் வெளிப்புறப் பகுதியான துமகூரு-நெலமங்களா நெடுஞ்சாலையில், சமூக வலைதள ரீல்ஸ்களுக்காக இளைஞர்கள் சிலர் அசாத்தியமான மற்றும் ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் அதிவேகமாகச் செல்லும் சாலையில், சிலர் எண் பலகை இல்லாத இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்ததுடன், ஒரு இளைஞர் இயங்கிக்கொண்டிருந்த பைக்கின் மீது ஆபத்தான முறையில் எழுந்து நின்று சாகசம் புரிந்துள்ளார்.
அங்குச் சென்ற காரில் இருந்த பயணிகள் இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைப் படம்பிடித்தபோது, அந்த பைக் ஸ்டண்ட் இளைஞர்கள் அவர்களுக்கு அநாகரிகமான சைகைகளைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களை வைத்துச் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
