இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரு, அதன் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு மிகவும் பெயர் பெற்றது. வழக்கமாக சாலைகளில் தான் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்துக்கிடக்கும். ஆனால், தற்போது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு உள்ளேயே ஒரு பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டிருப்பது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் @her_wandering_footprints என்ற கணக்கைக் கொண்ட அப்பெண், தனது அறையின் ஜன்னல் வழியாக இந்த காட்சியைப் பதிவு செய்துள்ளார். ஒரு சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை காட்டிய அவர், அதைவிட மோசமாக தனது குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே ஏராளமான கார்கள் வெளியேற முடியாமல் மெதுவாக ஊர்ந்து செல்வதைக் காட்டியுள்ளார். இந்த குடியிருப்பின் மெயின் கேட்டை தாண்டி வெளியே செல்லவே சுமார் அரை மணி நேரம் ஆவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பெங்களூரு டிராபிக் வேற லெவலுக்கு சென்றுவிட்டது, இப்போது அப்பார்ட்மெண்டிற்கு உள்ளேயே டிராபிக் ஜாம் ஆரம்பித்துவிட்டதா?” என ஆச்சரியத்துடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், இனி வீட்டை விட்டு வெளியேறும் முன்பே டிராபிக் குறித்து திட்டமிட வேண்டும் போலிருக்கிறது என வேடிக்கையாகக் குறிப்பிட்டு, பெங்களூரு நகரத்தின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து பிரச்சனையை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
