முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். பாபா பாஸ்கர் பொல்லாதவன், குட்டி, படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, வேங்கை, வேலையில்லா பட்டதாரி, தங்க மகன், கொடி, ஜகமே தந்திரம், மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடன கலைஞராக பணியாற்றி உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற கதிரல்ஸ் பாடலுக்கு பாபா பாஸ்கர் தான் நடனம் கற்பித்துள்ளார். சமீபத்தில் பாபா பாஸ்கர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நானும் தனுஷும் ஒரே பள்ளியில் தான் படித்தோம்.
நான் எட்டாவது வரை தான் படித்தேன். நான் எட்டாம் வகுப்பு வரை வந்து பாஸ் ஆனதற்கு நடிகர் தனுஷ் தான் முக்கிய காரணம். எனக்கு முன்னால் தான் அவர் உட்கார்ந்திருப்பார். தனுஷ் சூப்பராக படிப்பார். அவர் இருக்கும் தைரியத்தில் நான் படிப்பில் கவனம் செலுத்துவதே கிடையாது. மற்றபடி விளையாட்டு, டான்ஸ், கிரிக்கெட், கபடி என அனைத்திலும் நம்பர் ஒன் ஆக இருந்தேன்.
நான் ஸ்போர்ட்ஸில் சிறப்பாக செயல்பட்டதால் என்னை பள்ளியிலேயே வைத்திருந்தார்கள். நான் பாஸ் பண்ணதுக்கு முக்கிய காரணம் தனுஷ் தான். அவர்தான் டாப் ஸ்டுடென்ட். அவரைப் பார்த்து காப்பி அடித்து தான் நான் பாஸ் பண்ணுவேன். பள்ளியில் மட்டும் இல்லாமல் ஒரு நண்பனாக இப்போதும் என்னை தனுஷ் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு இந்த பாதையை காண்பித்ததும் தனுஷ் தான் என உருக்கமாக பேசியுள்ளார்.