ஃபிரோசாபாத்தில் வெறும் 5 ரூபாய் கூடுதல் கட்டணம் கேட்டதற்காக ஆட்டோ ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், நட்டநடு சாலையில் கைகலப்பாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். பேருந்து வராததால், அவ்வழியாக வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிப் பயணித்துள்ளார்.
தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அந்தப் பெண் ஆட்டோவை நிறுத்தச் சொல்லியுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் அவரிடம் வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதலாக 5 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணுக்கும் ஓட்டுநருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் உருவாகியுள்ளது. ஒருகட்டத்தில் ஓட்டுநர் தகாத வார்த்தைகளைப் பேசி ஏசியதால், பொறுமையிழந்த அந்தப் பெண் சட்டென்று ஆவேச நிலைக்கு மாறியுள்ளார்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற அப்பெண், ஓட்டுநரை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். “ஓவரா பேசுவியா?” எனக் கேட்டவாறே அவரது சட்டையைப் பிடித்து நடுரோட்டில் வைத்து ‘லெஃப்ட் ரைட்’ வாங்கியுள்ளார். இதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநரும் சளைக்காமல், பெண் என்றும் பாராமல் பதிலுக்குத் திருப்பித் தாக்கவே, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து இருவரையும் விலக்கி விட்டனர்.
