‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவரும் முன்னாள் பாஜக தலைவருமான அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் மீண்டும் தனது அதிரடி ஆக்ஷன் அரசியலைக் கையில் எடுக்க ஆயத்தமாகி வருகிறார். பாஜகவிலிருந்து விலகிய பிறகு போதைப்பொருள் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்கள் என சமூகப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், தன் அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக உருமாற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு கட்சியைப் பிரகடனப்படுத்துவதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் அமைதியாக நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை இந்த அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ‘மிஸ்டு கால்’ முறையைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் எண்ணிக்கையை வேகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மிஸ்டு கால் கொடுப்பவர்களைத் தொடர்புகொண்டு அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைக்கத் தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் அடுத்த பொதுக் கூட்டத்தில் இந்தச் சிறப்பு தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து விரைவில் மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் உறுப்பினர் சேர்க்கை பலமடங்கு அதிகரிக்கும் என ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதேசமயம், அண்ணாமலையின் வழக்கமான அதிரடிச் செய்தியாளர் சந்திப்புகள் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், பின்னணியில் அவர் ஒரு வலுவான வியூகத்தை வகுத்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள், முறைகேடுகள் மற்றும் கட்சி ரீதியான குழப்பங்களைக் கூர்ந்து கண்காணிக்க அண்ணாமலை ஒரு தனிக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார். இக்குழு சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், வரும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தவெகவை இலக்கு வைத்து கடுமையான ஆதாரங்களுடன் அண்ணாமலை தனது அரசியல் தாக்குதலைத் தொடங்குவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தெளிவுபடுத்தியபடி, இடைத்தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் அண்ணாமலைக்கு எதுவும் இல்லை. இதனால் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்தே அவரது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அமைப்பை மாநிலம் முழுவதும் சைலண்டாக வலுப்படுத்தி வரும் அண்ணாமலையின் இந்த அரசியல் கணக்கு, உள்ளாட்சித் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய அவரது ஆதரவாளர்களும் தீவிர அரசியலை கவனிப்பவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
