அமெரிக்காவில் 15 வயது பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 45 வயதான அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச் என்ற முன்னாள் சிறப்புப் பள்ளி ஆசிரியைக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட அந்த மாணவன் தனது வேதனையான அனுபவத்தை உணர்ச்சிப்பூர்வமான வாக்குமூலமாக அளித்தார். கடந்த சில ஆண்டுகளாகத் தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொண்டதாகவும், இந்த மோசமான கனவு போன்ற அனுபவம் வேறு யாருக்கும் நேரக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும், தன்னை துன்புறுத்திய ஆசிரியரைத் தான் மன்னிப்பதாக அந்தச் சிறுவன் கூறியதைக் கேட்டு, குற்றவாளியான அலிசன் நீதிமன்றத்தில் கதறி அழுது தனது செயலுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
சுமார் ஆறு மாத காலமாகக் கடந்த 2024-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவனான அந்தச் சிறுவனுடன் ஆசிரியை அலிசன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சக ஆசிரியர் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் ஆகியோருக்குத் தெரியவந்ததை அடுத்து, அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். இதற்கிடையே, அந்த ஆசிரியை மாணவனுக்கு சுமார் 25,000 குறுஞ்செய்திகளை அனுப்பியதும், இருவரும் நீண்ட நேரம் காரில் செலவிட்டதும், நள்ளிரவு வரை தொலைபேசியில் பேசியதும் சிறுவனின் தாயார் மற்றும் சகோதரியின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, தாயார் தனது மகனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, ஆசிரியை உடனான தனது பாலியல் உறவை அந்தச் சிறுவன் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டான்.
இந்த கொடூரமான நிகழ்வுகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், ஒருகட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டிக்காட்டினார். குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய மாநில உயர் நீதிமன்றம், அலிசன் தனது சிறைத்தண்டனையில் குறைந்தபட்சம் 85 சதவீத காலத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அவர் ஒரு பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரது ஆசிரியர் சான்றிதழ்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் பாதிக்கப்பட்ட மாணவனையோ அல்லது அவனது குடும்பத்தாரையோ எந்த வகையிலும் தொடர்புகொள்ளக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
