“அட கொடுமையே…” என்ன எல்லாம் பன்னிருங்காங்க… “சொம்போட ஓடிய பயணி… கொதித்தெழுந்த பிரிட்டிஷ் அரசு… ஒரே ஒரு லெட்டர்… தலைகீழாக மாறிய இந்திய ரயில்வே வரலாறு…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

இந்தியாவில் 1853-ஆம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், முதல் 50 ஆண்டுகளுக்கு ரயில்களுக்குள் கழிப்பறை வசதிகள் எதுவுமே இல்லை. பயணிகள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் பல நேரங்களில் அவசர அவசரமாக இறங்கிச் சென்று, மீண்டும் ஓடிவந்து ரயிலைப் பிடிக்க முடியாமல் பயணிகள் தவிக்கும் சூழலும், ரயிலைத் தவறவிடும் அசௌகரியங்களும் தொடர்கதையாக இருந்து வந்தன.

இந்த அவலநிலைக்கு 1909-ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. ஓகில் சந்திர சென் என்ற பயணி அகமத்பூர் ரயில் நிலையம் வழியாகப் பயணித்தபோது, திடீரென ஏற்பட்ட வயிற்று உபாதை காரணமாகக் கீழே இறங்கினார். அவர் திரும்பி வருவதற்குள் கார்டு விசிலடிக்க, ஒரு கையில் வேட்டியையும் மறுகையில் சொம்பையும் பிடித்துக்கொண்டு ஓடியும் அவரால் ரயிலைப் பிடிக்க முடியவில்லை. பயணிகள் அனைவருக்கும் முன்னால் ஏற்பட்ட இந்த அவமானத்தாலும் கோபத்தாலும் கொதிப்படைந்த அவர், சாஹிப்கஞ்ச் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்குத் தன் நிலையை விளக்கி, நகைச்சுவையும் காரசாரமும் நிறைந்த ஒரு புகார்க் கடிதத்தை எழுதினார்.

   

அந்தச் சாமானியப் பயணியின் நியாயமான கோபத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் ரயில்வே நிர்வாகம், அதே 1909-ஆம் ஆண்டில் 50 மைல்களுக்கு மேல் பயணிக்கும் அனைத்து ரயில்களிலும் கழிப்பறை வசதியை அறிமுகப்படுத்த உத்தரவிட்டது. ஒரு தனிநபரின் துணிச்சலான குரல், இந்திய ரயில்வே வரலாற்றையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. இன்றளவும் இந்திய ரயில்களில் நாம் அனுபவிக்கும் இந்த அடிப்படை வசதிக்கு வித்திட்ட ஓகில் சந்திர சென்னின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கடிதத்தின் நகல், புதுடெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.