மராட்டிய மாநிலம் அமராவதியில் போட்டியிட்ட நடிகை நவநீத் ராணா 19,731 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த செய்தி அவரது ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்தில் கருணாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நவநீத் ராணா.
அதனை தொடர்ந்து அரசாங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதியில் சுயேச்சை போட்டியளராக நின்று வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு பிளவுபடாத தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.
பின்னர் தேர்தலுக்குப் பிறகு அவர் போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு எம்பி ஆனார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதி கட்சி சார்பாக அமராவதியில் மீண்டும் போட்டியிட்டார்.
அவருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கிய காரணத்திற்காக கூட்டணி கட்சியான சிவசேனாவை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தேர்தலில் நவநீத் ராணாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பஸ்வந்த் வான்கடே என்பவர் போட்டியிட்டு இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பஸ்வந்த் வான்கடே 5,26 ,271 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் 19,731 ஓட்டுகள் வித்தியாசத்தில் நவநீத் ரானா தோல்வி அடைந்தார்.
இது அவரது ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று சர்ச்சையாக பேசி வந்தார். இவர் அப்படி பேசியது தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.