“முடிஞ்சா நீக்கிப் பாரு”…. “EPS-க்கு விழுந்த அடுத்த அடி”… சசிகலாவை மீண்டும் கொண்டுவர மாஸ் திட்டம்… கையெழுத்துப் போட்ட அதிருப்தி தலைவர்கள்….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்சிக்கல் முற்றிவரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், உட்கட்சிப் பூசல்கள் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விகுறியாக்கியுள்ளன. சட்டசபையிலும் பொதுவெளியிலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தியாளர்கள் திறந்தவெளியில் போர்க்கொடி தூக்கி வருவது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சிலர் வாக்களித்தது உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, போர்க்கொடி தூக்கிய தலைவர்களின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியக் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனால் அதிருப்தியடைந்த சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான அணியினர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும் அவரது நியமனங்களையும் நேரடியாகச் சவால் செய்து தீவிர காய்களை நகர்த்தி வருகின்றனர்.

   

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போட்டிப் பொதுக்குழுவைக் கூட்ட அதிருப்தி தரப்பு திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஏராளமான பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் ஏற்கனவே கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் நியமனங்கள் செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

   

இந்தத் திடீர் நீக்க நடவடிக்கைகளையோ அல்லது போட்டிப் பொதுக்குழு திட்டத்தையோ முறியடிக்க, அதிருப்தி தலைவர்களைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ஆனால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினால், அவர்கள் எளிதாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அமைச்சர்களாக மாறக்கூடும் என்றும், அது கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எடப்பாடி தரப்பு தயக்கம் காட்டி வருகிறது. இதனால் “இருதலைக் கொள்ளி எறும்பு” போல எடப்பாடி பழனிசாமி பொறுமை காப்பதாகக் கூறப்படுகிறது.

 

ஒருகாலத்தில் தொடர் வெற்றிகளைக் குவித்து தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கிய அதிமுக, இன்று ‘எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருபுறம் சசிகலாவை மீண்டும் சேர்க்கத் துடிக்கும் அதிருப்தி அணி, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தாக்கம் என இருமுனை நெருக்கடியில் அதிமுக சிக்கித் தவிக்கிறது. இந்த உட்கட்சிப் போரில் இறுதியாக யாருடைய கை ஓங்கும் என்பதும், அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பதும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.