எனக்கு சொல்லாமலேயே அந்த முத்தக் காட்சியை எடுத்துவிட்டனர்- பல வருடங்கள் கழித்து உண்மையைப் பகிர்ந்த ரேகா!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக ஜெமினி கணேசனை சொல்வார்கள். எம் ஜி ஆர், சிவாஜி போன்றவர்கள் ஆக்‌ஷன் மற்றும் குடும்ப திரைப்படங்களாக நடித்து வந்த போதும் ஜெமினி கணேசன் காதல் படங்களாக நடித்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார். அவருக்கு அடுத்து வந்த கமல் காதல் படங்களில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுக்கப்பட்டது.

கமல் நடித்த பல காதல் படங்கள் அவருக்கு இந்த பட்டத்தை பெற்றுத் தந்தன. அப்படி கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படம் அவரின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் கமலுடன் ரேகா மற்றும் ரேவதி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

   

படத்தின் தொடக்கத்திலேயே காதலர்களான கமலும் ரேகாவும் மலையில் இருந்து  குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வார்கள். அதில் ரேகா இறந்துவிட கமல் மட்டும் பிழைத்துக் கொள்வார். அந்த தற்கொலை காட்சிக்கு முன்பாக கமல் மற்றும் ரேகா இருவருக்கும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சியில் கமல், ரேகாவை உதட்டில் முத்தமிடுவார். இந்த முத்தக் காட்சி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. (நிறைய கமல் படங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெறுவதால் அவரை முத்தக் கலைஞன் என்றும் அழைக்கப்படுவார்) அந்த முத்தக் காட்சி பற்றி பலரும் அறியாத ஒரு தகவலை ரேகா இப்போது பகிர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் அந்த காட்சி பற்றி பேசும்போது “அந்த காட்சியின் போது கமல் சார் எனக்கு முத்தம் கொடுப்பார் என்றே எனக்கு தெரியாது. திடீரென அவர் முத்தம் கொடுத்ததும் நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன். காட்சி முடிந்ததும் அந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய வசந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரிடம் இதுபற்றி கேட்ட போது அவர்கள் இருவரும் ஓடி ஒளிந்துவிட்டனர்” எனப் பகிர்ந்துள்ளார்.