தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் அனைவருடைய பள்ளி நினைவுக்கும் கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 96 படத்தில் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, 96 திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது நாங்கள் பல சிக்கல்களை சந்தித்தோம். பணம் பற்றாக்குறை காரணமாக இரவு முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி எனக்காக அவருடைய சம்பளம் ஒரு கோடியை அப்படியே விட்டுக் கொடுத்தார். சம்பளமே அவர் வாங்கவில்லை. படம் ரிலீஸ் ஆன பிறகு கூட பல பிரச்சனைகள் இருந்தது. இதையெல்லாம் சமாளித்து தான் அதிலிருந்து வெளியே வந்தோம். ஆனால் விஜய் சேதுபதி செய்ததை என்னால் மறக்கவே முடியாது என இயக்குனர் பிரேம் தெரிவித்துள்ளார்.