பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய ‘மகாராஜா’.. 4 நாட்களில் மொத்த வசூல் இத்தனை கோடியா..?

By Mahalakshmi on ஜூன் 18, 2024

Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் 4-வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து படிப்படியாக முன்னேறி தற்போது சூப்பர் ஹிட் நடிகராக மாறி இருப்பவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தரபாண்டியன், பீட்சா, சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

   

   

வெற்றி மற்றும் தோல்வி என மாறி மாறி வந்தாலும் தனது நடிப்பால் மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றார். அதன் பிறகு விக்ரம் வேதா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். பின்னர் பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் கதாபாத்திரமும் கிடைத்தது.

 

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக, விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் சரிக்கு சமமாக நின்று தனது நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி பின்னர் ஷாருக்கானுக்கு வில்லனாக பாலிவுட்டில் கலக்கியிருந்தார். 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலேயே பெருமளவு கவனம் செலுத்திய விஜய் சேதுபதி இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அவர் ஹீரோவாக ஒரு சிறந்த கம்பேக் கொடுத்த திரைப்படமாக மகாராஜா திரைப்படம் வெளியானது. இது விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் பேட்டை செய்தது. 4 நாட்கள் விடுமுறையை பிளான் செய்து வெளியான நிலையில் 3 நாட்களில் 32.5 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 4 நாட்களில் மட்டும் 40 கோடி வரை வசூலை அள்ளி இருக்கின்றது மகாராஜா திரைப்படம்.