தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா, எம் ஜி ஆர், சிவாஜி, ஆர் எஸ் மனோகர், எஸ் எஸ் ராஜேந்திரன் என பலரும் அடக்கம். இதனால் அவர்கள் சினிமாவில் முன்னணிக்கு வந்தாலும் தங்களுக்கென ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தனர்.
இப்படி எம் ஜி ஆர் நாடகக் குழு, சிவாஜி நாடகக் குழு என தனித்தனியாக நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. இப்படி அவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள் பெற்ற அபரிமிதமான வெற்றிக் காரணமாக அவை திரைப்படமாகவும் ஆக்கப்பட்டன. தங்கப்பதக்கம் படமெல்லாம் நாடக உலகில் இருந்து வந்ததுதான்.
ஆனால் நாடக உலகு கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவை இழக்க ஆரம்பித்த காலத்தில் நாடகக் குழுவை சமாளிக்க முடியாமல் கைவிட்டனர். இதில் பெரும் பொருளாதார பின்னணியில் இருந்த எம் ஜி ஆர், சிவாஜி கூட தங்கள் குழுக்களைக் கலைத்துவிட்டார்களாம்.
ஆனால் RS மனோகர் மட்டும் எவ்வளவு கஷ்டம் வந்த போதும் தன்னுடைய நாடகக் குழுவை எப்படியாவது நடத்த வேண்டுமென ஆசைப்பட்டு நடத்தி வந்துள்ளார். ஆனாலும் ஒரு கட்டத்தில் அவராலும் குழுவை சமாளிக்க முடியாமல் அந்த குழுவில் இருந்தவர்கள் எல்லாம் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்களாம். இதனால் விரக்தியடைந்த மனோகர் நாடகத்துக்குப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, இனிமே நான் நாடகத்திலேயே நடிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது எம் ஜி ஆரின் காதுக்கு செல்ல, அவர் அதிர்ச்சியாகி மனோகரை அழைத்து “ஏன் இப்படி செய்தீர்கள். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். நீ தொடர்ந்து நாடகக் குழுவை நடத்து” எனக் கூறி வேண்டிய உதவிகளையும் செய்துள்ளார். அதன் பின்னர் பல நாடகங்களை நடத்தினார் மனோகர். அப்போது ஒரு நாடகத்தில் கலந்துகொண்டு எம் ஜி ஆர் பேசும்போது “நாடகக் காவலர் “ என்ற படத்தை மனோகருக்கு வழங்கினார்.