நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். தமி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன். 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார் நெப்போலியன். இதற்குப் பிறகு நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். 2000 கால கட்டத்திற்கு பிறகு கூட குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் நெப்போலியன்.
நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை நார் வளர்ச்சி நோய் இருந்தது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு சிகிச்சை செய்து தற்போது அமெரிக்காவில் மகனுக்காக செட்டிலாகி இருக்கிறார் நெப்போலியன். சில மாதங்களுக்கு முன்பாக அவரது மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார் நெப்போலியன். இவரது மகனின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இப்படியான நிலையில் நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாரதிராஜா பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், பொதுவாகவே சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு பெயர் மாற்றம் செய்து விடுவார்கள். அதன்படி குமரேசன் என்ற என்னுடைய பெயரையும் என் குருநாதர் பாரதிராஜா மாற்ற வேண்டும் என்று கூறினார். நீயே ஒரு 25 பேர் எழுதி எடுத்துட்டு வா என்று சொன்னதும் நானும் எழுதி எடுத்துட்டு போனேன். அதுல ராகுல் என்று வந்த பெயரை ஹீரோவுக்கு வச்சுட்டாரு. உன் உயரத்திற்கும் உடம்புக்கும் ஏற்ற மாதிரி ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்து நெப்போலியன் என பெயர் வைத்தார். உடனே இது பாட்டில் பெயராக இருக்கிறது என்று நான் நினைத்தேன்.
இதையும் மாற்ற வேண்டும் என்று சொன்னால் படத்தில் வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்பதற்காக பேர் நல்லா தான் இருக்கு என்று சொல்லிட்டேன். என்னுடைய நண்பர்கள் அனைவரும் இந்த பெயரை கேட்டதும் பாட்டில் பெயர்களை வைத்து கலாய்த்தனர். நான் ஹாலிவுட் வரை நடிக்க வேண்டும் என்பதற்காக என் இயக்குனர் இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார் என்று நான் அன்று சும்மா சொன்னேன். ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா போன பிறகு நான்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நான் நடித்து விட்டேன். பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவத்தை மறக்கவே முடியாது.
முதலில் அவருடன் நடிக்க சென்ற போது 25 நாட்கள் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்துக் கொண்டிருந்தேன். 70 வயசு கிழவனா இருந்தாலும் சரி 20 வயசு குமரியாய் இருந்தாலும் சரி அது மாதிரி அப்படியே நடித்துக் காட்டுவார். அவர் நடிப்பதில் 10% ஆவது எந்த குறையும் இல்லாமல் நடித்து விட வேண்டும் என்று தான் நான் நடித்தேன். உடனே அவரு நல்லா நடிக்கிற நீ வருங்காலத்தில் நல்லா வர போற என்று பாராட்டினார். அவர் சொன்ன மாதிரியே வாய் முகூர்த்தம் படிச்சிருச்சி என்ற பாரதிராஜா பற்றி நெப்போலியன் பேசியுள்ளார்.