மதுரை என்றாலே நாம் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில் தான். அது தவிர பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மதுரையில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் திருமலை நாயக்கர் மஹால். இந்த திருமலை நாயக்கர் மஹாலானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இந்த மஹாலின் வரலாறு என்ன என்பதை இனி காண்போம்.
திருமலை நாயக்கர் மஹால் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கர் ஆல் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டடக் கலைஞரால் திராவிட கட்டிடக்கலை மற்றும் இந்தோ சாரணிக் கட்டிடக்கலை ஆகியவற்றை பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த திருமலை நாயக்கர் மஹாலின் நான்கில் ஒரு பகுதியை தற்போது எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில் இந்த அரண்மனை ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை மதுரை ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர் 1623 முதல் 1655 வரை ஆட்சி செய்து மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டிடங்களை எழுப்பியிருந்தார். மிகப்பெரிய அரண்மனையாக இருந்த இந்த மஹால் திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் இந்த அரண்மனையை இடித்து திருச்சியில் தனது சொந்த அரண்மனை கட்டுவதற்காக நகைகள் மற்றும் தூண்களில் இங்கிருந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
திருமலை நாயக்கர் மஹால் பெரிய தூண்களுக்கு புகழ்பெற்றது. இங்கிருக்கும் தூண்களின் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி ஆகும். இந்த அரண்மனையின் பல பகுதிகள் பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதற்கு பிறகு எஞ்சியுள்ள பகுதிகள் அருகில் உள்ள தெருக்களுடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு இருக்கும் நடன மண்டபத்தில் தான் தினமும் திருமலை நாயக்கர் நடன நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளார்.
இந்த அரண்மனை 58 ஐடி உயரம் கொண்டது 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் இங்கு இருக்கின்றன. இந்த அரண்மனை அந்த காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டதாக அமைந்திருக்கிறது. ஒன்று சொர்க விலாசம் மற்றது அரங்க விலாசம் என்று அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் திருமலை நாயக்கர் மன்னரின் வசிப்பிடமாகவும் அரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியால நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இந்த அரண்மனையில் இசை மண்டபம், நாடகசாலை, பல்லக்கு சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரசு குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கான வசப்பிடம், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்திருக்கின்றது.
இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு முதல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981ம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒலி ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து வருகிறது. நாள்தோறும் மாலை 6:45க்கு ஆங்கிலத்திலும் பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் இந்த ஒலி ஒளி காட்சி நடைபெறுகிறது. இதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு வருவாய் கிடைக்கிறது.