உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிங்கன்பூர் கிராமத்தில், இரவு உறங்கச் சென்ற 20 வயது இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் அவரது அறையைச் சென்று பார்த்த தாய், மகள் இல்லாதது மட்டுமின்றி, அங்கு அவரது உடைகள், ஆபரணங்கள் மற்றும் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை கிடப்பதைக் கண்டு உறைந்து போனார். இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், அந்தப் பெண் உருமாறும் சக்தி கொண்ட ‘இச்சாதாரி நாகினி’ ஆக மாறிவிட்டதாகக் கிராம மக்கள் நம்பத் தொடங்கினர். அச்சமும் தவிப்பும் அடைந்த பெற்றோர், தங்கள் மகளை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சினிமா கதையை மிஞ்சும் வகையிலான உண்மைச் சம்பவத்தைக் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லாத வேறொரு நபருடன் குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்ததால், தனது காதலனுடன் வீட்டை விட்டு தப்பிச் செல்ல அவர் இந்த வினோதத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். தப்பிச் செல்வதற்கு முன்பாக, குடும்பத்தினரைத் திசை திருப்புவதற்காகவே பாம்புத் தோலை அறையில் விட்டுச் சென்றதுடன், தனக்கு அடிக்கடி பாம்புகள் கனவில் வருவதாகவும் முன்னரே பொய்யாகக் கூறி நாடகமாடியுள்ளார். வீட்டை விட்டுச் செல்லும் முன் தாயின் செல்போனில் இருந்து அவர் காதலனுக்குச் செய்த அழைப்பைக் கண்டறிந்த போலீசார், இந்த மொத்த தப்பிக்கும் திட்டத்தையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
