AR.ரஹ்மான் செய்த செயலால் கடுப்பாகி இனிமேல் நா பாட்டு எழுத மாட்டன்னு கிளம்பிய வாலி.. பலரும் அறிந்திராத சுவாரசிய தகவல்..

By Divya on பிப்ரவரி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் தோற்றுப்போனாலும், பாடல்களுக்கு இருக்கக் கூடிய மவுசு மட்டும் குறையாது. எத்தனையோ படங்கள் பாடல்களுக்காக மட்டுமே சில படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக வாலி வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும். அப்படியான ஒரு படம் ஜெண்டில்மேன். இப்படத்தில் படத்தின் கதையை தாண்டி, பாடல்கள் அனைத்துமே இன்று வரையிலும் இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம் பெறும். அப்படி இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலால், வாலிக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும், இயக்குநர் சங்கருக்கும் இடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்..

   

பாடலாசிரியர் வாலி கண்ணதாசன், உடுமலை நாராயண கவி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர். இவர் எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என இப்போதும் நினைப்பவர்கள் உண்டு. ஏன் கண்ணதாசனே கூட வாலியிடமே நீ எழுதிய பாடலை நான் எழுதிய பாடல்னு நினைச்சிருக்கேன் என கூறியதாக செய்தியும் உண்டு. வெறும் தத்துவ பாடல்களை மட்டும் எழுதாமல் அனைத்து ஜானரிலும் அடித்து ஆடக்கூடியவர் வாலி. சிவாஜி – எம்ஜிஆருக்கு எழுத ஆரம்பித்த வாலி ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர்.

   

 

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருப்பவர் ஷங்கர். இவரது முதல் படம் ஜென்டில்மேன். இப்படத்தில் முதலில் கமல் ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையில் அவருக்கு சில நெருடல்கள் இருந்ததால் அதிலிருந்து விலகியது. அதன் பிறகு அர்ஜுன் கமிட்டானார். மிகப்பெரிய ஹிட்டான இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். வாலியும், வைரமுத்துவும் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானவை. குறிப்பாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடல் இன்றுவரை பலரையும் ஆட்டம் போடவைப்பது. அந்தப் பாடலை எழுதியவர் வாலி. அந்தப் பாடலை எழுதிவிட்டு ஷங்கரிடம் படித்து காண்பிக்கும்போது, “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே” என்ற வரிகள் வேண்டாம். அதற்கு பதிலாக வேறு எழுதிக்கொடுக்கும்படி வாலியிடம் ஷங்கர் கேட்க; உடனே வாலியும் வேறு வரி எழுதிக்கொடுத்தாராம்.

பாடல் பதிவின்போது வாலி ஸ்டூடியோவுக்கு சென்றபோது, அவர் முதலில் எழுதிக்கொடுத்த ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’வரியை பாடகர் பாடிக்கொண்டிருந்தாராம். அதைப் பார்த்து டென்ஷனான வாலி, இயக்குநர் ஷங்கரிடம் ‘இந்த வரிகளுக்கு பதில் வேறு கேட்டாய் அதைத்தான் நான் எழுதிக்கொடுத்தேனே. இப்போது ஏன் அந்த வரிகளை பயன்படுத்தாமல் ஏற்கனவே எழுதிய வரிகளை பயன்படுத்துகிறாய். இனி உன் படத்துக்கு எப்போதும் பாட்டு எழுதமாட்டேன்” என கோபமாக கூறிவிட்டு வாலி வந்துவிட்டாராம். வாலியின் கோபம் அந்த நேரத்திற்கானது மட்டுமே. ஏனெனில் அதற்கு பிறகு காதலன், பாய்ஸ் என ஷங்கர் இயக்கிய பல படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.