பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், கொத்தனாராகப் பணியாற்றி வந்த முகமது ஜியாருல் என்ற நபர், தன் அடையாளத்தை மறைத்து சங்கர் யாதவ் என்ற பெயரில் நெற்றியில் திலகம் மற்றும் கலவா கயிறு அணிந்து இந்து அடையாளத்துடன் வலம் வந்துள்ளார். ஏற்கெனவே 6 திருமணங்கள் செய்திருந்த இவர், குலாப் பாக் பகுதியைச் சேர்ந்த விதவை பெண் ஒருவரை ஏமாற்றி, போலியான தகவல்கள் மூலம் பெற்ற ஆதார் கார்டைப் பயன்படுத்தி பிப்ரவரி 7, 2024 அன்று ஏழாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணை தனது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோதே ஜியாருலின் உண்மை பின்னணியும் அவரது மத அடையாளமும் அப்பெண்ணுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஜியாருலும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்ய முற்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் ஜியாருலைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பூர்ணியா சதர் காவல் நிலைய போலீசார் ஜியாருலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலியாக ஆதார் அட்டை தயாரித்தது மற்றும் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
