ஒடிசா மாநிலம் கோனார்க் அருகே உள்ள சந்திரபாகா கடற்கரைக்கு, 80 வயதான தனது தந்தையை அவரது மகன் முதன்முறையாக அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். தன் வாழ்நாளில் இதுவரை கடலையே பார்த்திராத அந்தப் பெரியவர், அலைகள் முதன்முதலாகத் தனது பாதங்களைத் தொட்டதும் கடலை நோக்கி கைகூப்பி வணங்கித் தனது நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். “கனவில் கூடக் கண்டிராத மிகப்பெரிய வியப்பு இது” எனக்கூறி அவர் நெகிழ்ந்துபோன காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
மகன் பகிர்ந்துள்ள இக்காணொளியில், அலை கரையைத் தொடும்போது அந்த முதியவரின் முகத்தில் வெளிப்பட்ட குழந்தைத்தனமான சிரிப்பும் அமைதியும் லட்சக்கணக்கான நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. இயற்கை மீதான அவரது பக்தியையும், தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் பாசத்தையும் இணையவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். “வயது தடையில்லை; சில மகிழ்ச்சிகளுக்கு சரியான தருணம் மட்டுமே தேவை” எனப் பதிவிட்டுள்ள இக்காணொளி நெட்டிசன்களின் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
