தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடியான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே ரகசியக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சி முதலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், திமுகவினர் தங்களை விமர்சித்து வரும் நிலையில், இந்த ரகசியப் பேச்சுவார்த்தை குறித்த உண்மைகளை அவர் தற்பொழுது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவு வெளியான நாளன்று மாலை 3 மணியளவில் பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் மூலமாகவே திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே ‘கனெக்டிங் கால்’ (Connecting Call) போட்டுத் தரப்பட்டதாகக் குறிப்பிட்டார். மாலை 5 மணி அளவில் இரு தரப்பும் பேசத் தொடங்கிய உடனே இதுகுறித்த ரகசியத் தகவல் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறிய அவர், இத்தகவலை அதிமுகவின் சி.வி.சண்முகத்திடமும், இடதுசாரித் தலைவர் பேபி, திருமாவளவன் போன்ற பிற தலைவர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சவால் விடுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பின்னணியில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது, அதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்பதே இவர்களின் டீல் என்றும், இதற்கு பாஜகதான் இடைத்தரகராகச் செயல்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யை அரசியல் ரீதியாக முடக்குவதற்காக உதயநிதி ஸ்டாலின் திமுகவின் அடிப்படைக் கொள்கைகளையே குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, இத்தகைய வன்மத்தோடு காய்களை நகர்த்தியதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.
பாஜகவின் மறைமுகத் திட்டத்தையும், திமுக-அதிமுகவின் இந்த ரகசியக் கூட்டையும் காங்கிரஸ் கட்சிதான் சரியான நேரத்தில் தலையிட்டு உடைத்தெறிந்ததாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தங்களின் திட்டம் முறியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்திலேயே உதயநிதி ஸ்டாலின் தற்போது காங்கிரஸ் கட்சியை வன்மையாக விமர்சித்து வருவதாகவும், காங்கிரஸுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ கால் பதிப்பதைத் தடுப்பதே காங்கிரஸின் ஒரே கொள்கை என்றும் அவர் திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
