ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், ஃபரீதாபாத் நகரின் திகாவன் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை மோனு காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் கடும் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், மோனு அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியின் தந்தை குல்பூஷண் காவல்துறையில் புகார் அளித்தார். வழக்கைப் பதிவு செய்த போலீசார் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர், ஆனால் மோனுவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மோனு காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்தனர்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டின் முன்பாக மோனு படுகாயங்களுடன் மயங்கிக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி மோனு பரிதாபமாக உயிரிழந்தார். மோனுவை சிறுமியின் குடும்பத்தினர் கடத்திச் சென்று, மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொடூரமாக சித்ரவதை செய்து அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
