அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ‘தி லேட் ஷோ வித் ஸ்டீபன் கோல்பர்ட்’ நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டது. 22 வினாடிகள் கொண்ட அந்த கிளிப்பில், டிரம்ப் கோல்பர்ட்டை இழுத்துச் சென்று ஒரு பெரிய பச்சை நிற குப்பைத் தொட்டிக்குள் போடுவதும், பின்னர் ‘YMCA’ பாடலுக்கு தனது வழக்கமான பாணியில் நடனமாடி கொண்டாடுவதும் போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்பிற்கும் ஸ்டீபன் கோல்பர்ட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாகவே அரசியல் ரீதியான மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் நீடித்து வருகின்றன. தனது இரவு நேர நகைச்சுவை நிகழ்ச்சிகளில் டிரம்பின் நிர்வாகத்தையும், அவரது கொள்கைகளையும் கோல்பர்ட் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல தளத்தில், “சிபிஎஸ் தொலைக்காட்சியில் கோல்பர்ட்டின் ஆட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. திறமையோ, போதிய ரேட்டிங்கோ இல்லாத இந்த கோமாளி இவ்வளவு காலம் நீடித்ததே ஆச்சரியம்” என்று பதிவிட்டு தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்பின் இந்த ஏஐ வீடியோ பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னை விமர்சிப்பவரை சிறுமைப்படுத்தும் வகையில் இதுபோன்ற போலியான வீடியோக்களைப் பகிர்வது மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் நாகரிகமற்ற செயல் என்று நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும் டொனால்ட் டிரம்பை கடுமையாக சாடி வருகின்றனர். அதே வேளையில், டிரம்பின் ஆதரவாளர்கள் இதனை ஒரு சாதாரண நையாண்டி என்றும், நீண்ட நாள் விமர்சகருக்கு டிரம்ப் தனது பாணியில் கொடுத்த தகுந்த பதில் என்றும் கூறி இந்த வீடியோவை ஆதரித்துப் பகிர்ந்து வருகின்றனர்.
