ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த அதிரடி ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த SRH அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கைக் குவித்தது. 256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்து அசத்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இவருடன் இணைந்து அபிஷேக் சர்மா (56 ரன்கள்) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (51 ரன்கள்) ஆகியோரும் அரைசதம் அடித்து அணியின் பிரமாண்ட ரன் குவிப்பிற்கு வழிவகுத்தனர்.
மைதானத்தில் ஹைதராபாத் அணி பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு, இஷான் கிஷன் தனது காதலியும் பிரபல மாடலுமான அதிதி ஹுண்டியாவுடன் ஸ்டேடியத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆர்சிபி அணிக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் இஷான் கிஷானை உற்சாகப்படுத்த அதிதி ஹுண்டியா ஸ்டாண்ட்ஸில் அமர்ந்து ஆதரவு அளித்தார். போட்டி முடிந்ததும் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்த தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
