ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், தற்காலிக விசாக்கள் (மாணவர், சுற்றுலா அல்லது பணி விசாக்கள்) மூலம் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் க்ரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுநாள் வரை அமலில் இருந்த “தகுதி நிலை சரிசெய்தல்” (Adjustment of Status – AOS) என்ற எளிய முறைப்படி, வெளிநாட்டினர் அமெரிக்காவை விட்டு வெளியேறாமலேயே நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால், புதிய கொள்கையின்படி பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் இனி அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியாது; அதற்குப் பதிலாக அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்றுதான் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, AOS செயல்முறையானது பொதுவான ஒன்றாக இல்லாமல், குறிப்பிட்ட சில விதிவிலக்கான நேர்வுகளில் மட்டுமே வழங்கப்படும் “அசாதாரண நிவாரணமாக” மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் என க்ரீன் கார்டு பெறத் திட்டமிட்டிருந்த அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவுக்குள் தங்கியபடி விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர்கள் தங்களின் சொந்த நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகச் செயலாக்கத்தின் (Consular Processing) மூலமே இனி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக அதிகாரிகளால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் அசல் நோக்கத்தை மீட்டெடுப்பதும், தற்காலிக விசாக்களின் காலம் முடிந்தவுடன் வெளிநாட்டினர் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்வதுமே இந்த மாற்றத்தின் முக்கிய இலக்காகும். குடிவரவு அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதோடு, க்ரீன் கார்டு மறுக்கப்பட்ட பிறகும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்குபவர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் சுமையையும் இது குறைக்கும் என்று அரசு கருதுகிறது. மேலும், பெரும்பாலான வழக்குகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மாற்றுவதன் மூலம், USCIS அமைப்பிற்கு ஏற்படும் பணிச்சுமை குறைந்து, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசாக்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான முக்கிய குடிவரவு முன்னுரிமைகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அமெரிக்க க்ரீன் கார்டு பெறும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள இந்தியர்களுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அண்மைக்காலமாக வழங்கப்பட்ட க்ரீன் கார்ட்களில் சுமார் 7 சதவீதத்தை (ஏறத்தாழ 78,000 பேர்) இந்தியர்களே பெற்றுள்ளனர். ஏற்கனவே இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் H1B விசாக்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த சொந்த நாடு திரும்பி விண்ணப்பிக்கும் புதிய விதியானது, அமெரிக்காவில் தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடும் பல்லாயிரக்கணக்கான இந்தியப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் கனவுகளுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
