தலைநகர் சென்னையில் நிலவி வரும் கடும் மின்வெட்டுப் பிரச்சினை, முதலமைச்சர் விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் பகுதியில் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் நள்ளிரவிலேயே வீதிகளில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடைகாலத்தில் மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக அவதிப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மின்வெட்டு விவகாரம் அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பூதாகரமாக வெடிப்பதற்குள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நிலைமையை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருந்து அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
