தவெக எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதம் செய்த காவல் ஆய்வாளர்… காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கிடிப்பு… நள்ளிரவில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்….!

By Nanthini on வைகாசி 22, 2026

Spread the love

சென்னை ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சையது இப்ராஹிம் கடந்த 8 ஆண்டுகளாகத் தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகக் கூறி, மகளிர் அமைப்பினருடன் மண்டபத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வடபழனி மால் ஒன்றில் வேலை பார்த்து வந்த அந்தப் பெண், காதலனுக்காகத் தான் மதம் மாறியதாகவும் கூறி நீதிகேட்டுப் பதாகைகளை ஏந்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த பெண்களை ஒருமையில் பேசியதுடன், அக்பர் அலி என்பவரைக் கடுமையாகத் தாக்கி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி மற்றும் அராஜகப் போக்கு குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

   

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், போலீசாரால் தாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் ஆதரவாக ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு நேரடியாக ராயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் சிதம்பரத்திடம், “பொதுமக்களை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் பணியாற்றிக்கொண்டு, இப்படி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு அரசுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறீர்களா?” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே காவல் நிலையத்திற்குள்ளேயே கடும் வாக்குவாதம் நிலவியது.

   

இதனிடையே, மணமகன் சையது இப்ராஹிம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று வேறொரு இடத்தில் திருமணத்தை முடித்துக் கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பெண்களை அவமரியாதையாகப் பேசிய வீடியோ ஆதாரங்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-வுடன் ஏற்பட்ட மோதல் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.