மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 13 வயது சிறுமி ஒருவரை 42 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாய் மறுமணம் செய்துகொண்டதால், சிறுமி தனது உடன்பிறப்புகளுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் தாத்தா, பேரனுக்குப் பெண் எடுப்பதற்காக ஒரு விசித்திரமான நிபந்தனைக்குச் சம்மதித்து, இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். மணமகனின் தந்தை விதித்த நிபந்தனையின்படி, தனது மகளை தாத்தாவின் பேரனுக்குத் திருமணம் செய்து தர வேண்டுமானால், அதற்குப் பதிலாக 13 வயது சிறுமியை தனது 42 வயது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த விபரீதத் திருமணம் குறித்து மத்தியப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பறக்கும் படைக்குத் தகவல் கிடைத்தது. அதிகாரிகள் விரைந்து வந்து இரு குடும்பத்தினரையும் எச்சரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தடுத்தனர். இருப்பினும், அதிகாரிகளின் கணக்கில் மண்ணைத் தூவிவிட்டு, ஏப்ரல் 26-ஆம் தேதி இரவோடு இரவாக சிறுமியை இந்தூரிலிருந்து உஜ்ஜைனுக்குக் கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சிறுமியை மீண்டும் தாத்தா வீட்டிற்கே அழைத்து வந்துள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு, மாமியார் வீட்டிற்குச் செல்ல மறுத்த சிறுமியை அவரது குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கி, வற்புறுத்தியுள்ளனர். இந்தச் சித்திரவதை குறித்துப் புகார் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ், 42 வயது மணமகன், அவரது தந்தை, சிறுமியின் தாத்தா, பாட்டி மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் உட்பட மொத்தம் 13 பேர் மீது காவல்துறையினர் நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
