தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், தினமும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுகவின் ‘கலைஞர் குடும்பத்தில்’ இருந்து புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில், திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கெடுக்காத நிலையில், கயல்விழி நேரில் கலந்துகொண்டது அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. பதவியேற்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் சரித்திர சாதனையாளர்; அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது” எனப் பாராட்டியது இந்த அரசியல் யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
மதுரையில் மு.க.அழகிரி நீண்ட காலமாகவே அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், அவரது தீவிர விசுவாசிகள் இன்னும் தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர். திமுக தலைமை மீதான தங்களின் அதிருப்தியைக் காட்ட, அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கயல்விழியை மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவிருக்கும் சூழலில், கயல்விழியின் தவெக என்ட்ரிக்கு பின்னால் ஒரு மாபெரும் ‘மதுரை கணக்கு’ இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரை மாநகராட்சி மேயர் பதவியைக் கயல்விழி குறி வைத்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை மண்ணில் அழகிரிக்கு இருக்கும் பாரம்பரிய செல்வாக்கையும், தவெகவுக்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆதரவையும் இணைத்தால், அங்கு எளிதாகக் முத்திரை பதிக்கலாம் என்று அவரது தரப்பு கணக்கு போட்டுள்ளது.
கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே, திராவிடக் கோட்டைக்கு சவால் விட்டு எழுந்துள்ள தவெக-வில் இணைந்தால் அது திமுகவுக்குப் பெரும் அரசியல் பின்னடைவாக அமையும். கயல்விழியின் இந்த அதிரடி முடிவுக்கு பின்னணியில் மு.க.அழகிரியின் மறைமுக ஆசியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களான மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் அதிமுகவில் ஐக்கியமாகி திமுகவுக்கு அதிர்ச்சியளித்தனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் மூர்த்தியைத் தோற்கடித்த கார்த்திகேயன் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மூலமாகவே கயல்விழி தவெகவில் இணைவதற்குக் காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தென் தமிழக அரசியலில் இந்த நகர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கயல்விழி அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையும் பட்சத்தில், அது மதுரையில் திமுகவின் வாக்கு வங்கியைப் பதம் பார்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அழகிரி குடும்பத்தின் இந்த அரசியல் மறுபிரவேசம் தவெகவுக்கு தென்மாவட்டங்களில் புதிய உத்வேகத்தைத் தரும் அதே வேளையில், திமுக தலைமைக்குச் சவாலான ஒரு சூழலையும் உருவாக்கியுள்ளது. திராவிடக் குடும்ப வாரிசு ஒருவரே மாற்று அரசியல் பேசும் தவெகவை நோக்கிச் செல்வது, தமிழக அரசியலில் அடுத்தகட்டப் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.
