ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோதட்டா கிராமத்தில், சொத்துத் தகராறு காரணமாக முத்யாலராஜு என்ற நபர், தனது பெற்றோர் என்றும் பாராமல் தன் மகன்களுடன் சேர்ந்து முதிய பெற்றோரைச் சரமாரியாக எட்டி உதைத்தும், கம்புகளால் அடித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற அராஜகச் சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. தனது கொடூரச் செயல் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில், முத்யாலராஜு அந்த சிசிடிவி கேமராவையும் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த முதிய பெற்றோர், தங்களுக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெற்றோரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், முத்யாலராஜு மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெற்றோரையே மகனும் பேரன்களும் சேர்ந்து தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
