தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த 33 வயதான துளசி என்ற பெண் சுற்றுலாப் பயணி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமுக்குச் சென்றுள்ளார். அங்கு ஆற்றில் யானைகளைக் குளிப்பாட்டும் வழக்கமான நிகழ்வை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, முகாமில் வளர்க்கப்படும் ‘காஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு யானைகளுக்கு இடையே திடீரென கடுமையான சண்டை ஏற்பட்டது.
யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டபோது, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். துளசியும் தப்பிக்க ஓடியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில், காஞ்சன் என்ற யானை முட்டியதில் நிலைதடுமாறிய மார்த்தாண்டா என்ற மற்றொரு யானை, கீழே விழுந்த துளசியின் மீது விழுந்தது. யானையின் ராட்சத எடைக்கு அடியில் சிக்கிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த அவரது கணவரும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினரும் உள்ளூர் போலீசாரும் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இக்கோர விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடக்காமல் தடுக்க, சுற்றுலாப் பயணிகள் யானைகளின் தும்பிக்கையைத் தொடுவது, அருகில் நின்று புகைப்படம் எடுப்பது, உணவளிப்பது போன்றவற்றுக்குத் தடை விதித்து, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்குமாறு அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
