அதுக்காக இப்படியா..? இளைஞரைக் கடத்திச் செருப்பு மாலை போட்டு… சிறுநீர் குடிக்க வைத்த 25 பேர் கும்பல்… ராஜஸ்தானை உலுக்கிய ‘பகீர்’ சம்பவம்..!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், திருமண விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக 21 வயது இளைஞர் ஒருவரைக் கடத்தி, செருப்பு மாலை அணிவித்து, கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீர் மாவட்டம் கக்வானா கிராமத்தைச் சேர்ந்த ஜீது (21) என்ற இளைஞர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் ஏற்றி, பீர் கிராமத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.

சிறை வைக்கப்பட்ட ஜீதுவுக்கு அக்கும்பல் கடுமையான சித்திரவதைகளை அளித்துள்ளது. அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதோடு, வலுக்கட்டாயமாகச் சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தை அக்கும்பல் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

   

போலீஸ் விசாரணையில் இந்த கொடூரத்திற்குப் பின்னணியில் உள்ள திருமணப் பகை வெளிவந்துள்ளது. பீர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணை ஜீது இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட முன்பகை காரணமாகவே இந்த கொடூரக் கடத்தலும் தாக்குதலும் அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.