ராமநாதபுரத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை ஆட்டோ மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் உணவகம் நடத்திவரும் நிலையில் அவருடைய குழந்தை வழக்கம்போல தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று சாலை நோக்கி அந்த குழந்தை ஓடிய நிலையில் ஆட்டோ ரிக்ஷா மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சிசிடிவி காட்சிகளில் அந்த குட்டி பெண் மெதுவாக சாலை நோக்கி தள்ளாடி செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது.
அடுத்து நிகழ இருக்கும் ஆபத்தை அறியாமல் சென்றபோது ஆட்டோ முன்னோக்கி நகர ஒரு நொடியில் அந்த வாகனம் குழந்தை மீது ஏறி செல்கின்றது. எதிர் திசையில் நடந்து வந்த ஒரு பெண் இந்த பயங்கரமான காட்சியை கண்டு உடனடியாக அலறி துடிக்கிறார். அலறல் கேட்டு உஷாரான ஆட்டோ ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்து பார்க்கிறார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும் அங்கிருந்தவர்களும் கூடி படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
