ஆன்மீக பூமியா இது…? 23 பெண்களை நிர்வாணமாக்கி GPay-யில் பணம் பறிப்பு… திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த பாலியல் சீண்டல்… பின்னணி என்ன…?

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் முடிந்து அய்யம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் தனியாகச் சென்ற தர்மபுரி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் பெண்களை, மதுபோதையில் இருந்த கும்பல் மடக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. மேலும், தங்கள் நண்பர்களை வரவழைத்து அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து, பணம் மற்றும் செல்போன்களைப் பறித்துக் கொண்டு, “எப்போது பணம் கேட்டாலும் தர வேண்டும், இல்லையென்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம்” என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கிடையே தர்மபுரி பெண்ணிடம் போனில் ரூ 1 லட்சம் மிரட்டிப் கேட்டதால், பயந்துபோன அப்பெண் முதற்கட்டமாக கூகுள் பே மூலம் ரூ 4,000 அனுப்பியுள்ளார்.

தொடர் மிரட்டல்களால் செய்வதறியாது தவித்த அந்தப் பெண்கள் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்தனர். திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அந்தப் பயங்கர கும்பல் இதுவரை சுமார் 23 பெண்களை இதேபோன்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, இந்தச் செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஆடையூரைச் சேர்ந்த வாசுதேவன், ஆகாஷ், அப்பு, ஹரிகரன், ஷர்மா, அருண்குமார், சிவகணேசன் (எ) சூர்யா மற்றும் துரை ஆகிய 8 பேர் மீது தற்போது கடுமையான குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக பூமியில், கிரிவலம் சென்ற பெண்களைக் கடத்தி மிரட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.