தேர்வர்களுக்கு குஷியான அறிவிப்பு… மின் வாரியத்தில் 1,850 பணியிடங்கள்…! இனி மின்கம்பம் ஏற ‘ஷூ’ போடலாம்… டிஎன்இபி-யின் அதிரடி உத்தரவு…!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 16ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்பொழுது இந்தத் தேர்வின் முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த உடற்தகுதி தேர்வின் முக்கிய அங்கமான மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வில், தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ஒரு முக்கிய விதிமுறை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு முன்னதாக தேர்வர்கள் வெறும் காலில் மட்டுமே மின் கம்பம் ஏறி இறங்க வேண்டும் என்ற கடினமான விதிமுறை நடைமுறையில் இருந்தது. ஆனால், தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும், வெறும் காலில் ஏறும் விதியைத் திருத்தி தற்போது ஷூ அணிந்து கொள்வதற்கு மின்வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

   

புதிய விதிமுறை திருத்தத்தின்படி, தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் ஷூ அணிந்து கொண்டு 30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில் 8 நிமிடங்களுக்குள் பாதுகாப்பாக ஏறி இறங்கி தங்களது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்குடன் பல லட்சம் காலிப்பணியிடங்களுக்குக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, மின்வாரியத்தின் இந்த விதிக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த திருத்தம் ஒரு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.