NEWS
நிச்சயமாகியும்.. திருமணம் செய்ய முடியவில்லை..! வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த மணமகன்: கலங்கிய மணப்பெண்..!
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருமணம் தடைபட்டே வந்ததால், இறுதியில் நீதிமன்றத்தை நாடி திருமணத்தை செய்து முடித்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகான டென்னிஸ் ஜோசப் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் டென்னிஸ் ஜோசப்பிற்கும், கேரளா திருச்சூரை சேர்ந்த பல் மருத்துவரான பெபி வீசன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு மே 19-ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அதில், வரும் 2020 மே 5-ஆம் திகதி திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அப்போது திருமணத்தை நடத்த முடியவில்லை. இதையடுத்து, 2021 மே 5-ஆம் திகதி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் அன்றைய தினம் ஊருக்கு வந்த ஜோசப், ஜூன் 5-ஆம் திகதி அதிகாலை 5 மணி விமானத்தில் அமெரிக்கா செல்லவும் டிக்கெட் புக் செய்தார். ஆனால், கொரோனா 2வது அலையால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இந்த முறையும் திருமணம் நடத்த முடியாமல் போனது,
இதனால், பதிவுத் திருமணம் செய்ய தீர்மானித்தனர். ஆனால், இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் மணமக்களில் ஒருவர் திருச்சூர் அல்லது எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவராக இருந்தால் சிறப்பு சட்டத்தின்படி,
சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் 5-வது பணி நாளில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, திருச்சூர் மாவட்டம் கூட்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், அப்போது திருச்சூர் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமலில் இருந்தது.
இதற்கு தீர்வு காண உயர் நீதிமன்றத்தை நாடி இந்த தம்பதி தங்களது சோகக்கதையை தெரிவித்தனர். அவரின் பிரச்னையை புரிந்து கொண்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் டென்னிஸ் ஜோசப், பெபி வீசன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கழுத்தில் சூடிய மாலையின் மணம் மாறுவதற்குள் டென்னிஸ் ஜோசப் நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். புதுப்பெண் அவரை பிரிய மனமின்றி கண்ணீர் மல்க விடைகொடுத்தார்.