டெலிவரி பாக்ஸில் குழந்தை…ஒரு டெலிவரி மேனின் உருக்கமான கதை!!

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை தங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது என்பது தான். நிதி நெருக்கடி காரணமாக அவர்களால் செய்யும் வேலையை விட முடியாது. முன்பெல்லாம் தாத்தா பாட்டி என்று வீடு முழுவதும் சொந்தங்கள் நிரம்பி இருக்கும். தற்போது வேலை தேடி ஊர் விட்டு ஊர் செல்லும் பலரால் சொந்தங்களுடன் சேர்ந்து வாழ முடிவதில்லை. இதே போன்று, சீனாவில், நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட தம்பதி தங்கள் குழந்தையை வளர்க்கும் கதை தற்போது வைரலாகி உள்ளது.

லி யுவான்யுவான்(( Li Yuanyuan)) என்ற நபர் சீனாவில் கூரியர் டெலிவரி செய்து வருகிறார்.அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு சந்தையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஃபீயர் ((Fei’er)) என்ற மகள் உண்டு . தற்போது இரண்டு வயதாகும் ஃபீயருக்கு பிறந்த 5 மாதங்களில் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவளது பெற்றோர் மிகுந்த மன வேதனை அடைந்தனர். அவர்கள் சேமித்து வைத்திருந்த பணம் பெருவாரியாக ஃபீயரின் சிகிச்சைக்கே செலவாகிப்போனது. இதனால் ஃபீயரின் எதிர்காலத்தை எண்ணி இருவரும் வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காலை 9 மணிமுதல் 11 மணி வரை, லியின் மனைவி சந்தையில் பிசியாக இருக்கும் நேரத்தில் ஃபீயரை, லி தான் பார்த்துக்கொள்வார். தன் வண்டியில் உள்ள ஒரு டெலிவரி பெட்டியில் சிறிய மெத்தை ஒன்றைப் போட்டு, அதில் ஃபீயருக்கு தேவையான பொருட்களை வைத்து , ஃபீயரை அதற்குள் அமரவைத்து வண்டியின் முன்பக்கத்தில் அந்த பெட்டியை வைத்துக்கொண்டு டெலிவரி செய்யக் கிளம்பிவிடுவார் . 11 மணிக்கு மேல் , அவரது மனைவியிடம் குழந்தையைக் கொடுத்துவிடுவார்.

ஃபீயர் 6 மாத குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அவள் தந்தை அவளை காலையில் தன்னுடன் வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். இப்போது அவளது வயது 2 . இதைக் குறித்து லி கூறுகையில், ” சில நாட்களில் வேலை கடினமாக இருக்கும்பொழுது, ஃபீயரின் சிரிப்புதான் அவருக்கு மன ஆறுதலாக இருந்தது என்றும், அவளுக்கு நல்ல எதிர்காலத்தை தருவதில் உறுதியாக இருப்பதாகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் நெட்டிசன்கள் சிலர் , இவ்வாறு குழந்தையைத் தினமும் உடன் அழைத்துச் செல்வது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *